home கவிதை, டிரெண்டிங் மூன்று கவிதைகள் : றபியுஸ்

மூன்று கவிதைகள் : றபியுஸ்

அரபிய நகரத்தில் பெய்யும் பனி பற்றிய மூன்று பிரதிகள்

எழுதுவதற்கு சாத்தியமற்ற ஒன்றை எழுதுவதற்கு பிரயத்தனம் கொள்கின்ற போது அந்த எத்தனிப்பு ஆட்கொள்ளும் நேரங்களின் உணர்வுகள் மிகக் கடினமானது. அதை யாரும் அவ்வளவு இலகுவில் கடந்திருக்க மாட்டார்கள். அந்த நேரங்களில்தான் பூக்கள் என்னுடன் பேசுவதும், நான் நிலவை கண்ணாடித் துண்டுகளாக உடைப்பதும்.
இந்த அந்திகாலப் பனியும் கணக்கற்ற யுகங்களாய் எழுத முடியாமல் போன கவிதையின் ரகசியங்களை உடைக்கிறது. பனிக்காலத்தின் தனிமையின் விறைப்பு பற்றி உனக்குத் தெரியும். அதன் உறையும் ஞாபகங்கள் எவ்வளவு வலிக்குமென்றும் உனக்குத் தெரியும். ஒவ்வொரு அந்தியும் வேலை முடிந்து வந்த சோர்வுடன் இந்த நகரத்தின் பனி பற்றிய இசைக் குறிப்புக்களை உன் மயக்கத்தின் தெளிவுடன் எழுதுகிறேன். அதை பியானோவில் இசைப்பதற்கு கைகள் நடுங்குகின்றன.
தொலைவில் நீ மூட்டுகின்ற தீயின் தகிப்பில் இன்னும் பனியின் வசமாகின்றேன். பனி நெருப்பின் திரவமா?
நெருப்பு பனியின் அரூபமா? நீ தரும் வலிக்காகவே பனியின் நெருப்பை போர்வைக்குள் அணைக்கிறேன்.
பியானோவில் ஆர்ப்பரிக்கின்ற கடலை வாசித்து விடலாம் மிக நிசப்தத்தை வாசிப்பது கடினம்.

 

 

குளிர்ந்த இரசம் போல் இரவு பேரமைதியாக இருக்கிறது
கொதிக்கும் தாது போல் நெருப்பின் திரவமாய் இரவுக்குள் தழும்பி வடிகிறாள்
தனிமையின் சுவர்களின் கடினத்தை
அவள் உணர்கிறாள்
மஜ்னுவின் நினைவுகளின் பெருமூச்சு
அவள் கண் இமைகளில்
கோடையின் புயலாக வீசுகிறது
அவன் அன்பின் பரிசுத்தத்தால்
அவள் நினைவுகள் படிந்த காலம் நீள்கிறது
மஜ்னு இதயத்தின் பைத்தியத்தால் அலைகிறான்

 

மிக மிக தூரத்தில் உன்னை உணர்கின்றேன்.
தூரம் என்பது வலிக்க வலிக்க நீ கை விடுகின்ற பொழுதுகளே தவிர காலமும் நிலமும், உடலும் இருப்பும் அல்ல
உன்னை காதலிப்பதற்கென்றே இசை கேட்கின்றேன்
பியானோவை ஒழுங்கற்று வாசிக்கிறேன்
நீருக்குள் இருந்து தரையில் தூக்கிப் போட்ட மீன் குட்டி போல் அதன் ஒலித் துடிப்புக்கள்
உன்னை தொல்லை செய்வதற்கென்றே கவிதை எழுதுகின்றேன்
உன் கவிதைகளை வாசிக்கின்ற போதும் அந்த ரகசியத்தில், அந்த இருளில் சிதைகின்றேன்
காதலின் தவிப்பு கவிதைக்குள் அடங்கிப் போகும் ஒன்றல்ல
மிகக் கடினமானது கண்மணி

 

  • றபியுஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!