home உன்னதம், நேர்காணல் புரளியின் அதிகாரமும் அரசியலும்

புரளியின் அதிகாரமும் அரசியலும்

கெவின் யங் உடன் ஒரு நேர்காணல்

புகழ் பெற்ற நியூயார்க்கர் இதழுக்கு கவிதைப் பகுதிக்கு பொறுப்பாசிரியராக பதவியேற்க இருக்கும்  கெவின் யங் அவருடைய புதிய புத்தகமான `பங் (Bunk) பற்றி கலந்துரையாடுகிறார்.

குவெர்னிகா இதழுக்காக இந்த நேர்காணல் கண்டவர் : எலிசா கோன்சலேஸ்

 

கவிஞரும் பல்துறை வல்லுநருமான கெவின் யங்கினுடைய புதிய புத்தகம், பங், ‘உண்மைக்குப் பின் மற்றும் போலி செய்திகளி’ன் வரலாற்றை சமூகப் பண்பாட்டு பகுப்பாய்வு, சிந்தனை, இலக்கிய விமர்சனம் ஆகியவற்றுடன் இணைக்கிறது. இது அமெரிக்காவினுடைய இன்றைய நிலைமையையும் கண்டறிகிறது.  யங்கின் வார்த்தைகளில் சொல்வதென்றால், கடந்த காலத்தில் நீண்டு புறக்கணிக்கப்பட்டதற்கு ஆதரவாக உடனடி உண்மைகள் எல்லாம் இடம்பெயர்க்கப்பட்டு நிராகரிக்கப்படுவதோடு வலுக்கட்டாயமாக மறக்கடிக்கவும்  படுகிறது”

உலகெங்கும் இருக்கும் புரளிகளையும், வெற்றுப் பேச்சுகளையும் காலவரிசைப்படுத்துகையில் `font of fakery’, அமெரிக்காவுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. 1835 ஆம் ஆண்டு வெளிவந்த `Great Moon Hoax’ தொகுப்பையும், ஆன்மீகம் (1840களில் உருவான இறந்தவர்களைத் தொடர்பு கொள்ள முயலும் இயக்கம்) – போலியான நினைவுகள் மற்றும் மோசடிகள்,கருத்துத் திருட்டு, ஏமாற்றல் மற்றும் அது தொடர்பான குற்றங்களையெல்லாம்  யங் சமாளித்தார். சில பெயர்கள் வாசகர்களுக்குப் புதிதாக இருக்கக்கூடும் (பிரெஞ்சு இறையியல் சிந்தனையாளரான George Psalmanazar) மற்ற சில பெயர்கள் அளவுக்கும் அதிகமான அளவில் பழக்கமானதாக (சமூகச் செயல்பாட்டாளர்Rachel Dolezal) இருக்கும். தெளிவான கண்களுடனும் முழுமையாகவும் இருந்த யங் ஒரு அறிஞரும், நீதிமானும் ஆவார். உளவியல் விளக்கமாக இருக்க முடியுமே ஒழிய பழிதுடைத்தலாக இருக்க முடியாது. உண்மையும், உள்ளது உள்ளபடியான செய்திகளும்: இவையெல்லாம் தவிர்க்கமுடியாதது, உண்மையானது, முக்கியமானது. ட்ரம்ப் தோன்றுவது வரம்புக்குட்பட்டு இருந்தாலும் கூட `பங்க்’ கை படிக்கும் போது டொனால்ட் ட்ரம்பை நினைக்காமல் இருப்பது சாத்தியமில்லை, ட்ரம்ப் பொய்யர் இல்லை  அல்லது பொய்யர் மட்டும் இல்லை என்பதை யங் நமக்கு நினைவூட்டுகிறார். “தப்பிப்பதற்காக பொய்யர்கள் அடிக்கடி பொய்சொல்லி மாட்டிக் கொள்வார்கள்; தப்பித்தல் ஒரு வடிவம் தான் புரளியும், இதில் பெருங்கேடு என்னவெனில் அது உண்மையானது போல் இருப்பதாகக் காட்டிக் கொள்வதாகும். இது உண்மையா, இல்லையா என்று பங்க் அக்கறைக் கொள்வதில்லை – நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இது எதிர்பார்க்கிறது.’

பங்க்கை வரையறுக்கும் பாத்திரம் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொது கேளிக்கை விழாக்களை ஏற்பாடு செய்த அமெரிக்க அரசியலாளர் பி.டி. பார்னம், இவர் ஜனாதிபதி என்கிற பதவியில் இல்லாத  ட்ரம்பின் முன்னுதாரணமாக இருந்தவர். பார்னம் ஒரு மோசமான கலைஞர், ‘இவர்தான் முதலில் அமெரிக்கரின் கண்டுபிடிப்பான நம்பிக்கை மனிதனை சட்டப்பூர்வமாக்கியவர்’. இவர் ஆப்பிரிக்க அடிமையான ஜாய்ஸ்  ஹேத் (1756-1836) என்கிற வயதான கறுப்புப் பெண்மணியை ஜார்ஜ் வாஷிங்டனின் குழந்தைப்பருவ பராமரிப்பாளராகக் காட்டினார். இவருக்கு 161 வயது என்று பார்னம் கூறினார். அமெரிக்க மக்கள் விருப்பப்பட்டு தங்களுடைய வஞ்சகத்தில் ஈடுபட்டனர்: பார்னமின் புரளி ஜாய்ஸ்  ஹேத் – ஐ விட அதிக பிரபலமானது. பார்னம் அந்த மூதாட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டார். அதில் அந்த மூதாட்டிக்கு வயது 161 இல்லை என்று தெரியவந்தபோது தான் பிண ஆய்வாளருக்கு வேறொரு பெண்ணின் உடலைக் கொடுத்ததாகக் கூறினார். பார்னம் – போலியை வளர்க்கும் மற்றவர்களைப் போல – வரலாற்றை புரளியாக்கி, புதிதாக கண்டுபிடிப்பதும் அதை அழிப்பதும் ஒரே நேரத்தில் நடத்திக் கொண்டிருந்தார். ஜாய்ஸ்  ஹேத் உடலை அவர் தவறாகப் பயன்படுத்தியது, ஆதாயம் தேடியது குறித்து யங்கின் அட்டவணையில் தனித்துவமாக எங்குமில்லை. அமெரிக்காவின் விருப்பமான மோசடி என்னவெனில் உணர்வுடனோ, உணர்வில்லாமாலோ பெரும்பாலும் வெள்ளையின மேட்டிமையையும், வெகுளித்தனத்தையும், போலியான ‘இன அறிவியல்’ அல்லது வெள்ளை மேலாதிக்கத்தினருடைய கனவிலிருக்கும் இன அடிப்படையிலான படிநிலையுடன் கூடிய சந்திரனில் இருக்கும் அமைப்பு மூலம் நிறுவ முயற்சிப்பது ஆகும்.  “நமது விருப்பத்துக்கும் நமது பயத்துக்கும் இடையேயான இடைவளியில் செயல்படும்போது புரளிகள் வதந்திகளை உண்மையாக்குகின்றன”  என யங் எழுதுகிறார்.

யங்கின் வேறு அபுனைவு படைப்பான, The Grey Album: On the Blackness of Blackness, கறுப்பு அமெரிக்கக் கலாச்சாரத்தை கண்டறிவதில் அதனுடைய வரலாற்றையும் விமர்சனத்தையும் ஒருங்கிணைக்கிறது. இவர் பத்து கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியரும் ஆவார். மிகவும் சமீபத்திலானது 2016 ஆம் ஆண்டு வெளியாகி பல பரிசுகளைப் பெற்ற Blue Laws: Selected & Uncollected Poems 1995-2015 என்கிற தொகுதி ஆகும். 2016 ஆம் ஆண்டில் இவர் Schomburg Center for Research in Black Culture –ன் இயக்குநர் ஆனதோடு இந்த மாதம் ஐரிஸ் கவிஞர் பால் முல்டூன்க்குப் பதிலாக, நியூயார்க்கர் இதழுக்கு கவிதைப் பகுதிக்கு ஆசிரியர் ஆக பொறுப்பேற்கவிருக்கிறார்.

புரளிகளைப் பொருளாகக் கொள்வதற்கு உங்களை உந்தியது எது ? புத்தகத்தின் மீதான உங்களது பார்வை, குறிப்பாக இறுதியிலும் ராச்சேல் டெலேசாலையும் டொனால்ட் ட்ரம்பையும் எதிர்கொள்ளும் போதும், மாறியது எப்படி?

நான் ஐந்து அல்லது  ஆறு வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன். ஒரு வழியில், நான் எனது முந்தைய அபுனைவு புத்தகமான The Grey Album  பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி சிந்திப்பதே பொய் சொல்வது, அதை மேம்படுத்துவது, மோசக்காரர்கள் ஆகியவை குறித்த நல்ல பக்கத்தின் சிந்தனைதானே. நான் கறுப்புக் கலாச்சாரம் குறித்த ஐக்கியப்பட்ட கோட்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் பொய்யான நினைவுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்த போது – அது ஒவ்வொரு வாரமும் வெளியானதாகத் தோன்றியது – நான் பொய்யின் மோசமான பக்கத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்ததோடு ஒருவரைப் பற்றி மற்றொருவர் மிக மோசமாக நம்பும் முறைகளைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தேன்.

எனவே அதன் பிறகு நான் `பங்க்’கை அக்கறையுடன் ஆரம்பித்தேன். நான் சிறிய தியான பகுதியாக ஆரம்பித்த சிந்தனை இன்றைக்கு வரலாறு மற்றும் கொஞ்சம் தத்துவம் சார்ந்த புரளியாக வந்திருக்கிறது. நான் உண்மையிலேயே புரளிகளைப் பற்றியும்  அது எங்கே வாழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான் அதைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக,  அது உண்மையிலேயே எப்படியிருக்கிறது என்பதை நாம் நினைத்துப்பார்க்க அதன் உண்மையான வடிவத்திலேயே தொடர நினைத்தேன்.

புரளிகள் மோசமாகி விட்டன என நீங்கள் நினைக்கிறீர்களா? நாம் அடிக்கடி ட்ரம்பின் தலைமைப்பதவியோடு தொடர்பானதும் நாம் வாழும் காலத்திலும் ‘இப்போது இன்னும் அதிகமாக’ எனும் சொற்றொடரை கேட்கிறோம். ‘இப்போது இன்னும் அதிகமாக’ என்பது புரளிகளுடனும், இதன் விரிவாக்கமாக நீங்கள் அழைப்பது போல இது ‘இடக்கரடக்கல் யுகம்’ என நினைக்கிறீர்களா?

இப்போது புரளிகள் அதிகமாக இருப்பதாக நான் கண்டிப்பாக நினைக்கிறேன் – அவை மிகவும் மோசமாக இருக்கின்றன. நாம் இப்போது மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கிறோம் என நினைக்கிறேன், அது குறித்து நான் சிந்திக்க ஆரம்பித்தேன், ஆனால் நான் கற்பனை செய்து பார்த்ததைவிட மிகவும் மோசமாக இருக்கிறது. யாரோ, ஒருவேளை சி என் என், சில வருடங்களுக்கு முன்பு ‘புரளியின் வருடம்’ என அறிவித்தது, அப்போது இருந்ததை விட இப்போது மிகவும் மோசமாக இருக்கிறது. உண்மை கண்டுபிடிப்பு அல்லது வலை அம்சத்தை மறுத்தல்  – வாஷிங்டன் போஸ்ட் மூலமாக – இருந்தது என நினைக்கிறேன் – ஆனால் அவர்கள் அதை நிறுத்திவிட்டார்கள். அது பல புரளிகள் இல்லை என்பதனால் இல்லை, ஆனால் மக்கள் எது உண்மை, எது உண்மையில்லை என்பதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதால்!

சமூகத்தின் மையமாக இருக்கக்கூடிய ஆழமான கலாச்சார இருளை அல்லது பேரார்வத்தை அல்லது நோய்மையை எப்படி புரளி வெளிப்படுத்துகிறது என்பதை நீங்கள் எழுதுகிறீர்கள். இன்றைக்கு அமெரிக்காவை பற்றி என்ன வெளியாகியிருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்கள்?

எங்களுடைய பெரும்பாலான புரளிகள் இனத்தைப் பற்றியது, இனத்தைச் சுற்றியிருக்கும் சிரமமான கேள்விகளைப் பற்றியது அல்லது மற்ற சமூகப் பிரிவுகள், ஆனால் இனம் தான் மிகவும் பிரதானமான ஒன்றாக இருக்கிறது. மத்திய கிழக்கில் நடைபெற்ற பல போர்கள் கூட, பற்பல புரளிகளை – ஜோர்டானை பற்றி பொய்யான நினைவுகளை எழுதிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர்  ஜோர்டான் நதி செல்லும் திசையை தவறாகக் குறிப்பிட்டதிலிருந்து, ஜியார்ஜியாவிலிருக்கும் வெள்ளையினத்தைச் சேர்ந்த ஒருவர் உருவாக்கிய கதாபாத்திரமான டமாஸ்கஸில் Gay Girl என்பது வரை – கிளப்பிவிட்டது. டமாஸ்கஸில் Gay Girl- ன் முகமூடி கிழிக்கப்பட்டு பொய் என ஆன பிறகு ‘அரபு வசந்தம் முழுவதும் பொய்’ என மாற்றப்பட்டது. புரளியெல்லாம் உடனே அரசியலாகிவிடுகிறது. நான் உணர ஆரம்பித்த விஷயம் என்னவெனில் எல்லாமே ஒரு வழியில் பார்த்தால் அரசியல்தானோ என்பதுதான்.

புரளி நேர்மறையாக இருந்தது – அது நல்ல செய்தி. நாம் அதிகமாக ஷேக்ஸ்பியர்களை அல்லது ‘இங்கே பாருங்கள், இவர் உண்மையிலேயே ஜார்ஜ் வாஷிங்டனுடன் தொடர்பு கொண்டவர், அந்த மூதாட்டிக்கு வயது 161’ என கண்டுபிடித்தோம்.ஜாய்ஸ்  ஹேத் விஷயத்தில் பி.டி. பார்னமின் மிகப் பெரிய வெற்றி என்னவென்றால், அவள் கறுப்பினத்தைச் சேர்ந்தவள்; அவள் கண்டிப்பாக அடிமையாக இருந்திருப்பாள், ஒரு வேளை பார்னம் அவளை வாங்கியிருப்பார். அது விரைவிலேயே தொந்தரவாகியது. அதன் பின் நூறு வருடம் அல்லது அதற்கும் அப்பால் ஃபாஸ்ட் பார்வார்ட் செய்தாலும் அதே பிரச்சனை. இப்படித்தான் புரளி அதிகாரத்தின் ஒரு செயலாக இருக்கிறது. நான் குறிப்பாக அதைக் கருத்துத் திருட்டு என்கிற நோக்கில் பின் தொடர்கிறேன், அது பெரும்பாலும் வெறும் அதிகாரம் என்பது மட்டுமல்ல, மக்களைத் திருடுவது மட்டுமல்ல ஆனால் கருத்தைத் திருடுவதும், முழு கலாச்சாரத்தையும் திருடி அது உன்னுடையது என சொந்தம் கொண்டாடுவது தான்.

புனைவுக்கும் அபுனைவுக்குமான பிரிவு ஓர் இழை போன்றது என்றும் அதை திரிப்பது அல்லது தாண்டுவது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என பொதுவாகச் சொல்லப்பட்டு வருவதற்கு எதிராக நீங்கள் கடுமையான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.  பாரிஸ் ரெவ்யூ நேர்காணலில் ஜெஃப் டயர், ‘இந்த வித்தியாசம் நீட்டிக்கக்கூடியதில்லை’ எனக் கூறியிருக்கிறார். நீங்கள் இந்த வித்தியாசம் பற்றியும், அவை நீட்டிக்கக்கூடியது மற்றும் முக்கியமானது என நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்?

இவையிரண்டுக்கும் வித்தியாசம் இருந்து வருவதாக நான் நினைக்கிறேன். எழுத்தாளர்களில் கூட பெரும்பான்மையோர் இதை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். ‘விவரணக் கவிதைகள்’ இருந்தாலும் கூட ‘அபுனைவு கவிதைகள்’ என்றோ பத்திரிகையியல் கவிதை என்றோ எதுவுமில்லை. இது ஒரு வேளை வெகு தூரமாக இருக்கலாம், ஆனால் உங்களுடைய வாசகர்கள் இதைப் பற்றி நினைத்துப் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்: Charles Reznikoff –ன் `Testimony’ என்கிற கவிதை ஒரு பேரழிவின் சாட்சியமாகும் அதைக் கவிதை என புத்தகத்தில் போட்டுவிட்டு அப்படியே திட்டமிடப்படவும் இருக்கிறது. அது உண்மையிலேயே மிகவும் சக்திமிக்கதாகவும், உண்மையானதாகவும் இருக்குமென நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் திரும்பி  அதில் ‘பாதி உருவாக்கப்பட்டது.’ என்று சொன்னால் அதனுடனான நமது உறவு வேறுமாதிரியாக இருக்கும். ஆவணப்பட வேலையில் கூட அமைப்பில் அல்லது எழுத்தில் அல்லது செழுமையாக்கத்தில் மாற்றமில்லை என அர்த்தமில்லை. ஆனால் அதைத்தான் நான் பேச விரும்புகிறேன், ஏனென்றால் எனக்கு, இந்த வித்தியாசத்தை அகற்றுவதோடு – அல்லது இன்னும் மோசமாக, புரளியைப் பொருத்தவரையில், அது இல்லையென்று அனுமானித்துக் கொள்வதோடு – அதில் விளையாட்டுத்தனமாக இருப்பது என்னவென்றால் அது புரளியை அடையாளப்படுத்தவில்லை. அது கலையின் சக்தியையும், கற்பனையின் சக்தியையும், அவை உருவாக்கப்பட்டவை என சில நேரங்களில் சொல்லக்கூடிய சக்தியையும் கூட அடையாளம் கண்டு கொள்ளவில்லை! அந்தக் கோடு தெளிவற்றதாக இருக்கிறது என்று சொல்வதை விட நமது கற்பனாவாதி எழுத்தாளர்கள் எப்போது செய்யக்கூடிய சாதகங்களைப் பெறுவதற்காக நாம் தண்ணீரை கலங்கடித்து விடுகிறோம்.

இதே போல சிலர் ஜேம்ஸ் ஜாய்ஸ் படைப்புகளைக் கொண்டு சொல் தொடர் அகராதியை உருவாக்குவதையும், அனைத்துப் புனைவுகளையும் உண்மையான விஷயங்களாக, அதாவது ‘இந்த கற்பனை நபர் உண்மையானவர்’ என  மாற்றுவதையும் நான் எதிர்க்கிறேன்.  அல்லது  ஹிப்பி இயக்க   உறுப்பினரும் கவிஞருமான ழாக் கியூரக்  உடனும் இதைச் செய்யலாம் – எல்லாவற்றையும் மாற்றுவது. இவையெல்லாம் வாழ்விலிருந்து எடுக்கப்பட வில்லை என சொல்வதற்காக இல்லை. உண்மையில், புத்தகத்தின் ஒரு பகுதியில் நான், ‘கலை வாழ்க்கையைத் திருடுகிறது’ என குறிப்பிடுகிறேன். ஆனால் கலைக்கும் அதற்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது, அது போல வாழ்க்கைக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நான் அதை மதிக்க விரும்புகிறேன். நான் புனைவு கலந்த சுயவரலாறை விரும்பாதவன் என சில மக்கள் நினைப்பதை பற்றிக் கொஞ்சம் கவலைப்படுகிறேன். நான் புனைவு கலந்த சுயவரலாறை விரும்புகிறேன். அது புனைவு கலந்ததை சுயவரலாறு என சொல்கிறது. அந்த எழுத்தாளர்களில் சிலர் என்னுடைய நண்பர்கள், புனைவு கலந்த சுயவரலாறு என்பது எதிர்மறையான விஷயமில்லை. இது எங்கே மாறுபாடும் என்றால் போலிஷ் எழுத்தாளர் ஜெர்சி கோஸின்ஸ்கியின் புனைவு கலந்த சுயவரலாறு குறித்த கருத்தில் ஆகும். அது உண்மையிலேயே பிரச்சனையான புத்தகத்திலிருக்கும் (The Patient Bird) பிரச்சனையாகும்.

நான் உங்களது சுயசரிதை குறித்து கொஞ்சம் பேச விரும்புகிறான். ஹார்வர்டில் சேர்வதற்கு ஈஸ்ட்கோஸ்ட்டுக்கு இடம்பெயர்ந்த நீங்கள் கான்சஸில் வளர்ந்தவர் என நினைக்கிறேன்.

எனக்கு ஒன்பது வயது ஆவதற்கு முன்பே ஐந்து அல்லது ஆறு முறை இடம் பெயர்ந்திருக்கிறேன். அதன் பின் கான்சஸுக்கு இடம் பெயர்ந்தேன்.

அங்கே வளர்ந்தது எப்படியிருந்தது? ஈஸ்ட்கோஸ்ட்டுக்கும், ஹார்வர்டுக்கும் இடம் பெயர்ந்தது எப்படியிருந்தது?

நான் ஹார்வர்ட் தெரிவு செய்தது உங்களுக்குத் தெரியும் – அது வேடிக்கையாகத் தெரியும். நான் சிறுவனாக இருக்கும் போது பாஸ்டனில் வசித்து வந்தேன். என்னுடைய குடும்பம் அங்கே இருந்தது. எனவே ஹார்வர்டுக்குச் செல்வது எனக்கு செளகரியமாக இருந்தது. தேவைப்பட்டால் மாமா வீட்டிற்கோ, அத்தை வீட்டிற்கோ செல்ல முடியும். அப்படி போகவும் செய்தேன். ஹார்வர்டில் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நான் இந்தப் புத்தகத்தை சமர்ப்பணம் செய்திருக்கும் ரிச்சர்ட் நாஷ், புனைவுகளுக்காக இந்த வருட நேஷனல் விருது பெற்ற கால்சன் ஒயிட்ஹெட் போன்றவர்கள் இன்றைக்கும் என் நல்ல நண்பர்களாக இருந்துவருவதோடு, கலைரீதியிலும் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். கான்சஸ் எனக்கு ஒரு மாற்றமாக இருந்தது. கவிதைகளுக்கான இந்தப் புதியபுத்தகத்தில் நான் எழுதியது போல இன்னும் கொஞ்சம் அதிகமாக உரைநடையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சுயசரிதையா?

எனக்கு சுயசரிதையில் எல்லாம் நம்பிக்கை இல்லையென்று நீங்கள் சொன்னீர்கள் என நினைத்தேன்.

தவறான உரிமை கோரலுக்கு வருந்துகிறேன்! நீங்கள் அமெரிக்கர்களின் உளவியலைப் பற்றி மகத்தான புரிதலைக் கொண்டவர் என்பதோடு நாட்டின் பல்வேறு இடங்களில் வசித்தவர். எங்கேயிருக்கும்போது நீங்கள் வீட்டில் இருப்பது போல உ ணர்கிறீர்கள்? அமெரிக்காவில் இருக்கும் போது வீட்டிலிருப்பது போல உணர்கிறீர்களா?

சென்று கொண்டிருக்கும் வண்டியில் இருக்கும் போது வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவதாக நான் நினைக்கிறேன், இது மிகவும் அமெரிக்கத்தனமானது. இந்த எல்லைகளைக் கடக்க அது காராகவோ, ரயிலாகவோ இருக்கலாம். அவையெல்லாம் நிறம் பூசப்பட்ட மாநிலங்கள் இல்லை. சிஎன்என் அல்லது வேறெதினாலோ அவையெல்லாம் ஒன்றாக இருக்கின்றன. பல இடங்களில் வாழ்ந்தாலும், பெற்றோர்கள் தெற்கிலிருந்து வந்தாலும், நான் அமெரிக்காவின் தென் பகுதியை விரும்புகிறேன், நான் பல்வேறு விதமான கலாச்சாரங்களையும் அவை மாறிய முறைகளையும் நான் விரும்புகிறேன். தென்பகுதி  மாறியது போல தென்பகுதி பற்றிய கதை மாறவில்லை, ஒருவேளை தேசத்தைப் பொருத்தவரையிலும் இது உண்மையாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து பேச வேண்டும், வாசிக்க வேண்டும், நீங்கள் கேட்கக்கூடிய எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எது அதைக் கொண்டுவந்தாலும் அந்த டேபிளில் கவிஞர்களும் எழுத்தாளர்களும் இருக்க வேண்டும். எனது நோக்கங்களில் அந்த டேபிளை கூடிய மட்டும் பெரிதாக்குவதும், விரிவாக்குவதும், சுதந்தரமாக்குவதும் ஒன்றாகும்.

பங்க் –கில், எந்த இடங்களில் நான் கவிஞரின் கண் அல்லது காதைக் கண்டுபிடித்தேனோ அவற்றில் தான் எனக்கான விருப்பம் இருக்கிறது: வார்த்தைகளுக்கு இடையில் உண்மையாக அல்லது உருவகமாக கொண்டிருக்கும் இந்த இசைவு. ஒரு எழுத்தாளராக உங்களுக்கு உரைநடையும், கவிதையும் எப்படி தொடர்பை ஏற்படுத்துகிறது?

அவை ஒன்றுக்கொன்று துணைபுரிந்து கொள்ளும் என நான் நினைக்கிறேன். கவிதையில் இருக்கும் துல்லியப்பாடு உலகம் பற்றிய கூற்று அல்லது தன்னைக் குறித்தே ஒருங்கிணைந்ததாக இருக்கிறது. நான் விரும்பும் உரைநடை கூட என்னை குதூகலத்தில் ஆழ்த்தும். ஆனால், சில விஷயங்களை, அது சுயவரலாறாக இருக்கட்டும் அல்லது கலாச்சார வரலாறாக இருக்கட்டும் அல்லது அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜான் ஹெர்ஷேயின் ஹிரோஷிமா குறித்ததாக இருக்கட்டும், அது கடினமாக விவாதிக்கிறது. இது உண்மை மற்றும் புனைவு பற்றி கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முக்கியமான முன்னோடி ஆகும். அவன் அடிப்படையில் மற்றவர்களுடைய கதையை எழுதுகிறான். அது ஏறக்குறைய புதுமையாகிவிடுகிறது. அந்தத் தருணத்தில் அந்தக் கதையைச் சொல்வதற்கு அவனுக்கு வேறெந்த வழியும் இருக்காது என்று நான் நினைக்கிறேன். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அவன் கலைநயமிக்கவனாக இருக்கிறான். அது சாட்சியம் மட்டும் இல்லாமல் அவனது செயலும் இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு யாராவது ஒருவர் ஹிரோஷிமா கவிஞன் என கட்டுக்கதை கிளப்பிவிட்டால் அது வேறொரு நிலையில் ஏற்கனவே அதற்கான பங்குகள் அதிகமிருக்கும்போது இது வேறு மாதிரியாக இருக்கும்.

கவிதையிலும், உரைநடையிலும் நீங்கள் பலவகைப்பட்ட தலைப்புகளில் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் மென்மையான கவிதகளையும், உலகம் குறித்த அவதானிப்புக் கவிதைகளையும், வரலாறு அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட கவிதைகளையும், நியூயார்க்கரில் ஆப்பிரிக்கக் கவிஞரான எம்மட் டில்லின் ‘Money Road’ பற்றி எழுதியது போலவும், எழுதுகிறீர்கள். இந்த மாதிரியான நோக்கத்துடன், அனுமதி உணர்வுடன் தான் நீங்கள் கவிதை எழுத ஆரம்பிக்கிறீர்களா? அல்லது நீங்கள் அதை பிற்பாடு பெறுகிறீர்களா?

நான் பதிமூன்று அல்லது பதினான்கு வயதிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் எதைப் பற்றியும் எழுதக்கூடாது என எதுவும் இருப்பதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் போற்றும் லாங்ஸ்டன் ஹுக்ஸ்  போன்ற எழுத்தாளர்கள் பல்வேறு வகைகளை வைத்திருக்கின்றனர். அவர் பல்வேறு வகையானதைப் பற்றி எழுதுகிறார். The Langston Hughes Reader ன் முடிவில், ‘pagent’ என அழைக்கப்படும் ஒரு வடிவம் இருக்கிறது. அவர் வெறும் அணிவகுப்பு  பற்றி எழுதியிருக்கிறார் (”The Glory of Negro History”)

வசந்தகாலத்தில் எனது அடுத்த கவிதைகளடங்கிய புத்தகம் வெளிவரவிருக்கிறது. அதில் எம்மட் டில்லின் கவிதையும் நான் புக்கர் ரைட் என்கிற சிவில் உரிமை சம்பந்தப்பட்டவர் குறித்த ‘oratorio’வும் அதில் இடம் பெறும். அதுதான் நான் இந்தப் புத்தகத்தை முடிக்க எனக்கு உதவியது: நான் வழக்கமாக எழுதுவதிலிருந்து வேறுபட்ட ஒன்றைப் பற்றி எழுதுகிறேன், ஏனென்றால் மற்ற விஷயங்கள் குறித்தும் நான் எழுதியிருக்கிறேன். Oratorio –விலிருந்து நேரடியாக எம்மட் டில்லின் கவிதை வந்திருக்கிறது, ஏனென்றால் அது S-I-T-E இடங்களை அங்கே பார்ப்பதிலிருந்து வந்திருக்கிறது. கவிதைகள் ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்துக் கொள்கின்றன என நான் உண்மையாகவே உணர்கிறேன். எம்மட் டில்லின் கவிதை ஆழமாக தனிமனிதருக்குரியதாகும், இந்தக் கவிதையில் முக்கியமான தருணம் என்னவெனில் எம்மட் டில்லைப் பற்றி பேசுவதிலிருந்து எம்மட் டில்லுடன் பேசுவது வரையாகும். இந்த மாதிரியான ஓர் இயக்கத்தைத்தான் நான் என்னுடைய கவிதையில் தேடுகிறேன். நான் வரலாறு அல்லது இசை பற்றி மட்டும் பேச விரும்பவில்லை, மாறாக அதற்கு உருவங்கொடுத்து, பேசி, அதோடு நெருங்கிய நண்பராக  ஆக விரும்புகிறேன்.

நீங்கள் உங்களுடைய புத்தகங்களை எழுதும் போது ஏதாவது உத்திகளைப் பின்பற்றுவீர்களா?

என்ன சொல்கிறீர்கள்? குடிப்பதா?

சில எழுத்தாளர்கள் சம்பிரதாயமானவர்கள். உதாரணமாக, சில எழுத்தாளர்களைத் தான் படிப்பார்கள், அல்லது குறிப்பிட்ட இசையைத் தான் கேட்பார்கள். நீங்கள் ஒரு புத்தகத்தின் நடுவில் இருக்கும்போது அதை முடிப்பதற்கு உங்களுக்கு எது உதவுகிறது?

இசையோடு தான் நான் எப்போதும் எழுதுகிறேன். எனக்கு என்ன விருப்பம் எனில் இசையின் தரத்தை புத்தகத்திலும் கொண்டுவருவதுதான். எனது கவிதைகள் அடங்கிய இரண்டாம் புத்தகத்தின் பாதியில் இருக்கும்போது, நான் அது ஒரு இரட்டை ஆல்பம் என நினைத்தேன். ஆல்பம் கட்டமைப்பு வாயிலாக  அமெரிக்க ஓவியக் கலைஞரான ஜீன் மைக்கேல் பாஸ்கொயட் –ன் கதையைச் சொல்லவிருப்பது எனக்கு வித்தியாசமான பக்கங்களைக் கொடுக்க உதவியது. B-side லிருந்து கூட என்னால் ஆரம்பிக்க முடியும். அது எனக்கு ஒரு பெரிய கேன்வாஸைக் கொடுத்திருக்கிறது. மிகவும் இறுக்கமாக புத்தகங்களை எழுத விரும்பவில்லை, ஆனால் அதே நேரத்தில் கவிதைகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கவிதைக் குவியல்களாக இல்லாமல் புத்தகமாக விஷயத்தை எனக்குச் சொல்லவேண்டும். நான் மாணவனாக இருந்தபோது நான் ஏதோவொன்றைச் செய்தேன்… அது வெறும் கவிதைகளாக இருந்தன. ஒரு வாரத்திற்குப் பிறகு அது புத்தகமானது என் நினைவில் இருக்கிரது. அவையிரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது. இது எனது படைப்பு அல்லது இன்னொருவருடைய படைப்பு என்பதனால் மட்டும் இல்லை. அது அதுவாகவே இருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் அது அதுவாகவே இருக்கத்தான் விரும்புகிறது.

‘பங்க்’கைப் பொருத்தவரையில், பல முறை மறுவரிசைப் படுத்தப்பட்டது. சில விஷயங்கள் அதில் இருக்கின்றன, ஆனால் புத்தகம் இப்போது எப்படியிருக்கிறதோ அப்படிக் கொண்டு வர நீண்ட நேரம் பிடித்தது, மறுபடியும், மறுபடியும் எழுதி, தேவையில்லாததை தூக்கியெறிந்து, பல முறை அதனுடைய கட்டமைப்பை வடிவமைத்து பார்னமுடன் ஆரம்பித்ததிலிருந்து இயங்க ஆரம்பித்தது.

உங்களுடைய அபுனைவு முயற்சிகள் குறித்து பேசலாம். நீங்கள் நியூயார்க்கரின் கவிதை ஆசிரியர் ஆகப் போகிறீர்கள், அதுவும் முதல் கறுப்பின கவிதை ஆசிரியர். ஒருவகையில் பார்த்தால் நியூயார்க்கர் ஒரு பிற்போக்கான அமைப்பு என்று சொல்லலாம், கண்டிப்பாக அதிக அளவிலான பாரம்பரியத்தைக் கொண்டது. கவிதை ஆசிரியர் என்கிற நிலையை உங்களுடையதாகத் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்வீர்கள், அந்த அமைப்புடன் ஆன ஊடாடல் எப்படி இருக்கும்?

நான் ஹைகூ தான் செய்கிறேன். இது ஒரு ஹைகூ பத்திரிக்கை. நான் சமீபத்தில் ஒரு குழுவில் பால் முல்டூன் உடன் பங்கேற்றபோது இது குறித்து அதிகமாக பேசினோம். ஓரளவுக்குச் சரியாக அவர், ‘ஆசிரியர் யார் என்பது ஒரு விஷயமில்லை, கவிதைகள் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்’ எனக் கூறினார். முந்தைய மாற்றத்தின் போது, என்னுடைய கவிதையை ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்தான் தேர்ந்தெடுத்தார் என நினைக்கும் போது உண்மையிலேயே அதை இன்னொருவர் தேர்ந்தெடுத்திருப்பார். அதில் வெளியாகும் கவிதைகள் இன்னும் ஆழமான விஷயங்களுடன் வெளியாக வேண்டும் என்பதை நான் தொடர்ந்து கண்டறிவேன். ஒரு வாசகனாக , நான் படைப்பை அதனுடைய கருத்து அடிப்படையிலேயே அணுகுவேன். வேலை என்னை இயக்கும், என்னை சிந்திக்க வைக்கும், என்னை சிரிக்கவும் அழவும் வைக்கும், என்னுடைய நிலையை வேலை கண்டிப்பாக மாற்றும். இது ஒரு சுவராசியமான நேரம்: கறுப்பினக் கவிதையின் மறுமலர்ச்சி காலம். நாம் மிகவும் செறிவான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். நான் அதைக் கண்டறிய விரும்புகிறேன், அதோடு மொழிபெயர்ப்பிலும் கவிதையை கண்டறிய விரும்புவதோடு, பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், ஆங்கிலத்தில் வெளியாகும் கவிதைகள் – அல்லது அதன் பன்மைத்தன்மை. இத்தனை வகையான ‘ஆங்கிலங்கள்’ இருக்கின்றன.

நீங்கள் Schomburg Centre ன் இயக்குநராகவும் இருக்கிறீர்கள், இதற்கு முன்பு Emory University காப்பகத்தின் க்யூரேட்டராக இருந்திருக்கிறீர்கள். Schomburg சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடும்போது எப்படியிருக்கிறது?

காப்பக ஆய்வு இல்லாமல் `பங்க்’ எழுதியிருப்பேனா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. புத்தகத்தின் கவரை நான் காப்பகத்தில் கண்டுபிடித்தேன். புத்தகத்தின் சில பகுதிகளை நான் காப்பகத்தின் மூலம் தான் புரிந்து கொண்டேன், கூடவே நானும் புரளிகள் குறித்து ஒரு காப்பகத்தை அல்லது சேகரிப்பை உருவாக்கிக் கொண்டேன். Schomburg க்கு வந்திருப்பது என்பது இந்த இடத்தைப் புரிந்து கொள்வதும், பாதுகாப்பதும், கறுப்பினக் கலாச்சாரத்தையும் அதனுடைய அனைத்து வடிவங்களையும் குறித்து தீவிரமாக சிந்திப்பதற்குமான ஒரு நீட்டிப்புத்தான். அதைத்தான் நான் Schomburg ல் விரும்புகிறேன். இங்கு கலையும், கலைப்பொருட்களும், புகைப்படங்களும், அதன் பிரதிகளும், ஃபிலிமும் …. இருக்கின்றன. இங்கே ஐந்து பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமானதாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டதாகும். Schomburg வழங்கும் ஒரு பகுதி கறுப்பினம் குறித்த முழுமையான உணர்வையும், சூழலையும் கொடுக்கிறது. எனவே நாங்கள் கறுப்பின சக்தி அல்லது எம்மட் டில் குறித்து ஆன்லைன் புகைப்படக் கண்காட்சியை நடத்தும் போது, நீங்கள் முழுமையாக அனைத்தையும் பார்க்க முடியும். இங்கிருக்கும் வாசல் வழியாக வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எங்களுடைய பணியாளர்கள் அவர்களது கடமையைச் செய்வதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. வருடத்திற்கு சுமார் 250,000 முதல் 300,000 பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். நாங்கள் ஒரு மியூஸியம் இல்லை – மக்கள் வந்து அவர்களுடைய கைகளின் மூலம் ஜேம்ஸ் பால்ட்வின்னின் கையெழுத்துப் பிரதியைத் தொட்டு, பார்த்துச் செல்ல முடியும். அதுதான் எனக்கு முக்கியம்.

இந்தத் தவிர்க்கமுடியாத கேள்வியை நான் கேட்டே ஆக வேண்டும். வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஏதேனும் ஆலோசனை இருக்கிறதா, வளர்ந்து வரும் எப்படி வாழ்வது?

எப்படி நாம் வாழ்வது? வாவ்.

நீங்கள் `வாழ்தல்’ என்கிற சொல்லை உபயோகிக்கத் தேவையில்லை.

ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளரான எனக்கு, மற்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களும், வளர்ந்து வருவது மட்டும் முக்கியமானது இல்லை என்கிற உணர்வை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஓரிடத்தைச் `சென்றடைய’ வேண்டும். ஆனால் வினோதமான வழியில், இது மாஜிக்கல் டைம், ஒருவர் அவருடைய எழுதுவதின் நடுவே இதைக் கண்டறிய வேண்டும். அதோடு உலகத்தில் கவிஞராக இருப்பது, இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும், என்பதையும் கண்டறிய வேண்டும். நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் சில கேள்விகள் குறித்து சிந்திக்கும் திறன் வளர்ந்துவரும் எழுத்தாளர்களிடம் புது முறைகளாக இருக்கின்றது. அவர்கள் புதிய இடங்களை கண்டுபிடிப்பார்கள். அது உற்சாகமானது. உரைநடை எழுத்தாளரான நான் இன்னொரு வழியில் வளர வேண்டும். அதற்கு வெவ்வேறு நேர சட்டமைப்புகள் இருக்கின்றன: பங்க் –ஐ நான் X வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்க முடியுமா என்று தெரியவில்லை, அல்லது The Grey Album, எழுத இருபது வருடங்கள் எடுத்துக் கொண்டது, அதில் பத்துவருடங்கள் தீவிரமாக எழுதினேன்.

 

வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் – கவிஞர்கள் அல்லது உரைநடையாளர்கள் – யாருடைய படைப்பு உங்களுக்கு உத்வேகம் தருவதாக  தெரிகிறது?

நான் நியூயார்க்கரில் சேரவிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஏதாவது கூறினால் மக்கள் நான் அளவுகோலை ஒரு பக்கமாக சாய்க்கிறேன் என நினைப்பார்களோ என நான் உணர்கிறேன். ஆனால் நேஷனல் புக் அவார்ட்ஸின் நீண்ட பட்டியல் உத்வேகம் தருவதாக இருக்கிறது. அந்தப் பட்டியலில் பல சுவராசியமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது மக்களின் கண்கள் இருக்குமென நினைக்கிறேன்.

‘பங்க்’கின் முடிவில் நீங்கள் கேட்டிருக்கும் அந்தப் பெரிய கேள்வியை நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். `உண்மை என்பது முழுமையானதாகவோ அல்லது சார்பானதாகவோ இல்லையென்றால் என்ன, திறமையை – நினைவு போல ஒரு தசை – உபயோகித்து நாம் மிகவும் பலவீனமாக வளர்ந்திருப்பதை உதாசீனம் செய்யலாமா? நாள்பட்டதிலிருந்து உத்வேகமுள்ளதாக நாம் எப்படி அதை மறுபடியும் உருவாக்குவது?

அதற்குப் பிறகு நான் குறிப்பிட்ட இசையில் இதற்கான விடை இருப்பதாக நினைக்கிறேன். [’Funk, hokum, blue devils, the trap, the blues.”]. இசைக் குறிப்புகள் பற்றிதான் பதில். தசையை இழந்துவிட்டோமோ என்கிற கவலையோடு, பங்க்-கில் நான் கூறியது போல, சோகமில்லாத ஒரு கதையை நான் எழுத விரும்புகிறேன். அதற்கான நம்பிக்கை இன்னும் என்னிடம் இருக்கிறது, ஆனால்….

*******

 

எலிசா கோன்சலேஸ் கவிஞரும், உரைநடை ஆசிரியரும் ஆவார். இவருடைய அபுனைவுகள் Asymptote, Harvard Review, The New Yorker online மற்றும் பலவற்றில் வெளியாகி வருகின்றன. இவர் 2016-17 ஆம் ஆண்டு கலைக்கான ‘Fulbright Scholar’ ஆவார்.

(தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!