home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : ஸ்ரீதர்பாரதி

கவிதைகள் : ஸ்ரீதர்பாரதி

கோழிக்குழம்பின் வாசனை

வடபழநி AVM ஸ்டுடியோவுக்கு எதிர்சந்தில்
ஒரு பாடாவதி மேன்ஷனில் வசிக்கிற Mr.X
சென்னைப் பெருநகரத்தில் திரைப்பட உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார்
ஒரு ஞாயிறன்று மேன்ஷனுக்கு அருகிலுள்ள
காரைக்குடி செட்டிநாடு மெஸ்சிலிருந்து கிளம்பிய
கோழிக்குழம்பின் வாசனை அதிகாலையில்
அரைத் தூக்கத்திலிருந்த அவரை கிறங்கடித்து
அவரது சொந்த ஊரான சேடபட்டிக்கு அழைத்துச் சென்றது
அதுமாத்திரமில்லாது
Mr.பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்திற்கும் அழைத்துச் சென்றது
வைக்கோல் போர் மீதேறி கோழி பிடிக்கும் Mr.சப்பாணி(எ) கோபால கிருஷ்ணனையும்
தன் வீட்டுக் கோழியைக் களவாடியதாக
பக்கத்து வீட்டுப் பெண்ணோடு சண்டையிடுகிற Mrs.குருவம்மாளையும்
உடல்நலம் குன்றிய கோழியை கண்ணாடிக்கார மருத்துவரிடம் எடுத்துச் செல்லும்
Miss.மயிலுவையும் அறிமுகப் படுத்தியது
மேலும்
அது அவரை சொந்த கிராமத்திலேயே தங்கிவிடும்படியும் கட்டளையிட்டது

அதுசமயம்
அடுத்த ஞாயிறன்று முனியாண்டி விலாசில் கொதிக்க இருக்கும்
கோழிக்குழம்பின் வாசனை
அதனருகில் மேன்ஷனில் வசிக்கும் Mr.y
மற்றும் Mr.z ஐ கிறங்கடித்து
அவர்களது சொந்த ஊர்களான ஆண்டிபட்டிக்கும் அரசபட்டிக்கும் விரட்டியடிக்கலாம்
Mr.பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ ‘கிழக்குச்சீமையிலே’ படங்களுக்கும் அழைத்துச் செல்லலாம்
மேலும்
அவர்களை அங்கேயே தங்கிவிடும்படியும் கட்டளையிடலாம்.

 

  • ஸ்ரீதர்பாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!