home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : ரோஸாவசந்த்

கவிதைகள் : ரோஸாவசந்த்

 

மறதி

 

கார்களுக் கிடையே கடந்து போனவனுக்கு

கார்களுக் கிடையே கடக்கும் கர்வம்.

கார்களுக் கிடையே ஓடிய நாய்க்கு

கார்களுக் கிடையே ஓடும் பீதி.

கார்களுக் கிடையே பறந்த தட்டானுக்கு

கார்களை பற்றிய பிரஞ்ஞையில்லை.

 

தட்டான் குறித்த நம் கற்பிதம்,

பறப்பதன் அற்புதம்,

turbulenceஇன் மர்மம்,

காலங்காலமாக கைமாற்றி காத்து செல்லும் ரகசியம்

எது குறித்தும் தட்டானுக்கு பிரஞ்ஞையில்லை.

turbulenceஐ முழுசாய் விளக்க

நூற்றாண்டாய் தூக்கம் கெட்டவனுக்கு

தட்டானைப் போல பறக்க வைக்க தெரியவில்லை.

 

கனவில் தட்டானாக மாற தெரியாத எனக்கு

கார்களுக்கிடையே கடந்து போனவனின்

கர்வம் மறக்கவில்லை

 

 

 

சுய இன்பம்

 

எழுதுவதற்காக மட்டுமே எழுதிகொண்டிருக்கும் வரியை

எழுதிக் கொண்டிருப்பதை எழுதிகொண்டிருக்கும் போது,

விளக்கணைந்து இரவை சல்லாபிப்பதாக

கற்பனை செய்து சுய இன்பத்தில் ஆழ்வதாக

கற்பனை செய்து பார்தேன்.

காலம் ஒரு கணம் அசையாதது போல மயக்கம்.

காலம் அசையாமல் கணமா?

சுவர்கள் மூடிக்கொள்ளப் போவதுபோல் நடிக்க,

சிறுவயதில் தனித்து நடந்த இரவின் காலடிகளை

இங்கிருந்து கேட்கும்போது

வரிகள் மட்டுமே நிஜம் போல தோன்றுகிறது.

 

  • ரோஸாவசந்த்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!