home கவிதை, டிரெண்டிங் கவிதைகள் : ஆகி

கவிதைகள் : ஆகி

 

புதர்கள்

அறையினுள் காடா வளர்ந்துள்ளது
அவள் அதைச் சொல்லும்போது
அதை நான் நம்பவில்லை
அவள் அதை சொல்லவில்லை
அதை எப்படி சொல்வது
அவள் அதை நேரடியாக
சொல்லவில்லை என்று சொல்லலாம்
தனையறியாது வரையும்
முகபாவமாக
வாய்தவறி உதிரும்
வார்த்தைகளாக
அவள் அதை
நுட்பமாக வெளிப்படுத்தி
அது எனது நனவிலியில்
புலனாகியும்
நான் அதை நம்பவில்லை
அவளுள் இருந்த கட்புலனாகா
முட்புதர்க் காடு கட்புலனாகும் வரை
இந்தக் காடு அவளுடையதில்லையாம்
என்னால் நம்பமுடியவில்லை
அவள் சொல்லில் மெய்மையும்
அவள் சொல்லினுள் முட்காடுமுள்ளது
இந்தக் காடு என்னுடையதுமில்லை
காடா
எங்கே
எந்தக் காடு
இந்த நுட்பமகன்ற முட்காட்டில்
எத்தனைப் புதர்கள் எனக்குச் சொந்தம்
இதை ஊகிக்க முடியாது
ஒரே புதிராய் எங்கும் புதராய்
இந்தக் காடு எம்முடையதோ
பிஞ்சின் காலில் முள் தைத்துவிடப்போகிறது
வேலிகாத்தான் வேலைக்காகாதா
அணிற்குஞ்சின் கிறீச்சொலியில் இத்தனைத் தீவிரம்
அறையினுள் வௌவாலா வட்டமடிக்கிறது..

 

 

காதல் நிலையம்

கிளைகள் நீக்கமற நிறைந்திருக்கும்
செங்குத்தான தூசிபடர்ந்த அடுக்ககத்தின்
ஏதோவொரு முதற்சதுக்கக்தில் இயல்பாக என்னைக்
கேட்கிறான் எங்கே காதல் நிலையமென
எனது ஆவணங்களிலுள்ள துவாரங்கள்
ஒன்றிலது மறைந்திருக்கலாம்
என்னைக் கேட்டால் இதுவொரு
கலாச்சாரக் காவல் நிலையம்
இதனுள் காதல் நிலையமொன்று இருந்தால்
அது மறைந்து இருந்தும் இல்லாமலிருக்கவேண்டும்
இவர்களின் பகற்கனவுகளுள் கெட்ட கனவுகள்
குள்ளநரிக்கூட்டத்தின் கெட்ட கனவுகளுள் கொடுங்கனவுகள்
இருந்தும் இல்லாமல் இருக்கவேண்டும்
நாங்கள் வெட்டிக்கனவுகள் காணும் கெட்ட கனவுகள்
அதென்ன நீங்கள் நாங்கள்
நாங்கள் தான் இவர்கள்
சிக்காமல் இருந்துமில்லாமலிருக்கவேண்டும்
இயல்பானவன் விருப்பங்கள் நிறைந்திருப்பவன்
எக்கச்சக்கமாய் அவனுள் இச்சைகள்
அவனின்றி இவர்கள் எவருமில்லை
மூச்சிரைக்க விரைகிறான்
அடுக்கடுக்கான ஆயிரமடுக்கு அடுக்கக
புதிர்நெறிக்கூடத்தில் ஏதோவொரு அடுக்கில்
ஏதோவொரு சதுக்கக்தில் தன்னைத் தேடி
உன்னைத் தேடும் உன்னைத் தேடி
எங்கும் எந்திரக் கண்கள்
இருக்கமுடியாத இறுக்கம்
மனதிலெனது பட்டியல்
கிளைகளில் ஒதுங்கி
அத்தி விதைகள் தூவி
துவாரங்களை நிரப்பி
கற்களுடன் உரையாடி
கண்கட்டும் உடுப்பு தரித்து
புற்கள் வளர்த்துத் திரியவேண்டும்.

 

  • ஆகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!